வலியன் என்னும் குருவி இத்தலத்து இறைவனை பூசித்ததால் 'வலிவலம்' என்ற பெயர் வந்தது. கோயிலைச் சுற்றி கிழக்குப்புறம் தவிர மற்ற மூன்று புறமும் அகழி உள்ளது.
மூலவர் 'மனத்துணைநாதர்' என்னும் திருநாமத்துடன், சற்று உயர்ந்த பாணத்துடன், பெரிய லிங்க வடிவில் காட்சி தருகின்றார். 'இருதய கமலநாத சுவாமி' என்னும் அழைக்கப்படுகின்றார். அம்பிகை 'மாழையொண்கண்ணி' என்னும் திருநாமத்துடன் பெரிய வடிவில் காட்சி அளிக்கின்றாள். வாளையங்கண்ணி என்றும் வணங்கப்படுகின்றாள்.
பிரகாரத்தில் விநாயகர், அறுபத்து மூவர், வள்ளி, தேவசேனை சமேத சுப்பிரமண்யர், நடராஜர், மகாலட்சுமி, பைரவர், நவக்கிரகங்கள் ஆகிய சன்னதிகள் உள்ளன.
கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில்களுள் இதுவும் ஒன்று. சூரியன், காரண முனிவர், பாண்டவர்கள், வலியன் எனும் கருங்குருவி ஆகியோர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர்.
அருணகிரிநாதர் இத்தலத்து முருகப்பெருமானை தமது திருப்புகழில் பாடியுள்ளார்.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் தலா ஒரு பதிகம் பாடியுள்ளனர்.
இக்கோயில் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|